Sunday, November 10, 2019

யாசகம்


"கைதட்டி பிச்சை கேக்கறதுக்கு பதில் ஏதாவது வேலை செஞ்சு உழைச்சு சாப்பிடலாம் இல்ல?"

"நீ வேலை தர்றயா? நான் உழைக்கறேன் ..." எங்களுக்கெல்லாம் யார் வேலை தர்றா? எத்தனை ஏச்சு பேச்சு, கேலி கிண்டல். .."

நான் சென்று கொண்டிருந்த நகரப் பேருந்தில் இந்த உரையாடல் - ஒரு கல்லூரி மாணவிக்கும் ஒரு திருநங்கைக்கும் இடையே.

சமீப காலங்களில் நகரப் பேருந்துகளில் திருநங்கைகள் யாசகம் அடிக்கடி காணமுடிகிறது. முன்பு அப்படியில்லை.

நடத்துனர்களுடன் நட்பு கொண்டு நினைத்த ஸ்டாப்பில் பஸ்ஸில் ஏறுகிறார்கள், இறங்குகிறார்கள். பயணியரின் அசெளகரியத்தைப் பொருட்படுத்தாமல் படிக்கட்டுகளில் நின்று நடத்துனரிடம் கதை பேசுகிறார்கள். மிரளவைக்கும் உருவம், அதிரடி பேச்சு. பலமாக கைதட்டி கவனம் ஈர்த்து யாசகம். பயணிகள் வேண்டாவெறுப்பாக காசு தருகிறார்கள்.

நான் பார்த்தது ஒரு வழித்தடத்தில் மட்டுமே. இது நகரம் முழுக்க இருக்கும் என யூகிக்கமுடிகிறது. ஓடும் பஸ்ஸில் ஒரு சில நிறுத்தங்கள் வரை இது தொடர்கிறது. பிறகு இறங்கி வேறு பஸ் பார்க்கப் போய்விடுவார்கள் போல. டிக்கெட் எடுத்துப் பயணிப்பதாகவும் தெரியவில்லை.

இதர யாசகம் கேட்போர் மீது ஏற்படும் இரக்கம் இவர்கள் பால் ஏற்படுவது இல்லை

மூன்றாம் பாலினத்தவரை இந்த சமூகம் ஏன் புறக்கணிக்கிறது? ஏன் மரியாதையாக நடத்த மறுக்கிறது?

"உழவர் சந்தை இறங்கு"

மனதைக் குடையும் கேள்விகளுடன் பஸ் என்னை வெளியே உமிழ்ந்தது